இந்திய ஜனநாயகப் புலிகள் நிறுவனர் நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸில் சேர விருப்பக் கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருக்கின்ற கட்சியிலே, இருக்கின்ற மேடையிலேயே இங்கிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும், இந்தியாவிலேயே எனக்கு ஒருவனுக்குத்தான் இருக்கிறது என்று கூறிக்கொண்டு…
கட்சிதாவிய வண்டுமுருகன் மாதிரியே தமிழக அரசியல் களத்திலும் கட்சித்தாவல் என்பது அடிக்கடி அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
சமீபத்தில் கூட நடிகர் சரத்குமார், தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியையே பா.ஜ.கவில் இணைத்து விட்டு தன்னையும் பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார்.
அந்த வரிசையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான், காங்கிரஸ் கட்சியில் தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து விருப்பக் கடிதம் கொடுத்து வந்திருக்கிறார்.
ஏற்கனவே காங்கிரஸ், பா.ம.க, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என்று ஒவ்வொரு கட்சியாக ரவுண்ட் அடித்தவர், மீண்டும் காங்கிரஸுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறார்.
காங்கிரஸில் எத்தனை நாட்கள் தொடர்வார் என்பது அந்த மன்சூருக்கே வெளிச்சம்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் வலம் வந்து கொண்டிருந்த பெங்களூரு புகழேந்தியும் அவரை விட்டு கிளம்ப இருப்பதாக தகவல்கள் அலையடிக்கிறது.
இதையும் படிங்க: தணிக்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் – 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!
கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நடந்தபோதுதான், கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி மீது ஊடக வெளிச்சம் படத் தொடங்கியது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டி.டிவி. தினகரனுடன் நெருக்கம் காட்டியவர், பின்னர் ஓ.பி.எஸ்_ இ.பி.எஸ் இணைந்து நடத்திய அதிமுகவில் இருந்தார்.
அப்போது பா.ம.க குறித்து பேசியதால் இ.பி.எஸ்சால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் பெங்களூர் புகழேந்தி.
அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட போது அவருடன் இணைந்து கொண்டார்.
ஓ.பி.எஸ்.சுடன் நகமும் சதையுமாக இருந்து வந்த நிலையில்தான் தற்போது, தேனி தங்கத் தமிழ்ச்செல்வன், புகழேந்தியை திமுகவுக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல் கசிகிறது.
இதையும் படிங்க: திமுகவும் அதிமுகவும் கள்ளக்கூட்டணி போட்டுள்ளது – போட்டுத்தாக்கும் டிடிவி தினகரன்
ஏப்ரல் 19ஆம் தேதி ஓசூரில் வாக்களித்த பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது , மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இந்த நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என்று வெளிப்படையாகக் கூறி பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களித்ததை தெரிவித்தார்.
பா.ஜ.க கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிலையில், பெங்களூரு புகழேந்தி ஏன் இப்படி பேசினார் என்று சந்தேகங்கள் எழுந்தது.
தற்போது புகழேந்தி திமுகவுக்கு தாவுகிறார் என்னும் தகவல்கள் வெளியான நிலையில், இதற்காகத்தான் அன்று அப்படி பேசினாரா என்றும் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அது சரி… தேர்தல் முடிவுகள் வெளியானதும் இன்னும் எத்தனைப் பேர் கட்சி தாவலுக்கு தயாராக இருக்கிறார்களோ?
இதையும் படிங்க: சிதம்பரம் கோவில் வழக்கு – நீதிமன்றம் உத்தரவு