மகன் கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சிக்கன் ரைஸை சாப்பிட்ட தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே தாத்தாவை கொன்றதாக கைதான கல்லூரி மாணவர் மீது தாயாரைக் கொன்ற வழக்கும் சேர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியில் வசித்து வந்தவர் பொறியியல் கல்லூரி மாணவர் பகவதி. இவர் நாமக்கல்லில் ஜீவானந்தம் என்பவரின் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்து குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட தாத்த சண்முகநாதன் மற்றும் தாயார் நதியா ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால்தான் இதுபோன்று நிகழ்ந்ததாகக் கூறி பகவதி அளித்த புகாரில் நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தை ஆய்வு செய்தபோது சுகாதாரம் இல்லாமல் இருந்ததாகக் கூறி சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்ட சிக்கன் ரைஸை ஆய்வுக்கும் உட்படுத்தினர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 72வயது சண்முகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே ஆய்வில் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் பகவதியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது மாணவர் பகவதிதான், சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து தனது தாத்தா சண்முகநாதனுக்கும், தாயார் நதியாவுக்கும் கொடுத்தது தெரியவந்தது. பகவதியின் தகாத நடவடிக்கைகளை தாத்தாவும் தாயாரும் கண்டித்ததால் அவர்கள் மீதான வெறுப்பில் இதுபோல் செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது..!!
இதனைத் தொடர்ந்து தாத்தாவுக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக பேரன் பகவதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த தாயார் நதியாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், தாயாருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக பகவதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது.
சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தா மற்றும் தாய் என இருவரை கல்லூரி மாணவர் கொலை செய்தது அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.