வாழ்க்கை பல பாடங்களைக் கற்றுத் தருகிறது . பொதுவாக, எந்த ஒரு கண்டுபிடிப்பையும் செய்ய, அதற்கு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி தேவை. ஆனால் சில சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தான் எதையும் நிறுத்தாமல் செய்யத் தூண்டுகிறது. இன்றைய நவீன சமுதாயத்தில் இதுபோன்ற பல புதுமைகளை நாம் பார்த்திருக்கிறோம். கூலிதொழிலாளி ஒருவர் தனது ஊனமுற்ற மகளுக்காக தயாரித்த ரோபோ வைரலாகி வருகிறது.
தெற்கு கோவாவின் போண்டா தாலுகாவில் உள்ள பெத்தோரா கிராமத்தில் வசிக்கும் 40 வயது தந்தை பிபின் கதம். இவருக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். மகளால் தானாக சாப்பிட முடியாது. அவரின் மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருக்கும் நிலையில் மகளுக்குத் தினமும் வேலைக்குச் சென்று விட்டு வந்து அவர் உணவு ஊட்டிவிடுவார்.
இந்த நிலையில் அவரால் சரியான நேரத்தில் மகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை. அவரின் மனைவியும் இதனை நினைத்து மிகவும் வருத்தமடைந்துள்ளனர். இதனால் அவர் இணையத்தில் உணவு வழங்கும் ரோபோவை தேடியுள்ளார்.
ஆனால் அந்த மாதிரி எந்த விதரோபோவும் கிடைக்கவில்லை. எனவே தானே ஒரு ரோபோவை உருவாக்க முடிவு செய்துள்ளார். அதற்காகத் தினமும் வேலை முடித்துவிட்டுப் பல மணி நேரங்கள் செலவு செய்து 4 மாதங்களில் ஒரு அற்புதமான தானாக உணவு அளிக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளார்.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அவர் ரோபோ உருவாக்குவதற்கு எந்த வித படிப்பும் படித்தது இல்லை. இணையத்தில் தகவல்களைப் படித்துத் தான் அந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், தனது மகள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொண்டு நான் வீட்டுக்கு வரும் போது என்னைப் பார்த்துச் சிரிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த ரோபோ மூலம் என் மகள் மாறியுள்ள இதர குழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த ரோபோவிற்கு ‘மா ரோபோ’ என்று பெயரிட்டார் . மேலும் இந்த ரோபோ முழு குரல் கட்டளை கட்டுப்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. ரோபோவின் கையில் உள்ள தட்டில் உணவை வைத்தால், அது சிறுமிக்கு உணவளிக்கும். கறி, பருப்பு என கிடைக்கும் உணவு வகைகளில் ஏதாவது ஒரு உணவைச் சாப்பிட வேண்டும் என்று பெண் குரல் கட்டளை மூலம் சொன்னால் அந்த ரோபோ அப்படித்தான் செயல்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் கோவா மாநில கண்டுபிடிப்பு கவுன்சில் இந்த கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளது. இந்த சாதனத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு நிதி உதவி வழங்க முன் வந்துள்ளது.