ஸ்பை கேமரா மூலம் தனது பெண் தோழியின் அந்தரங்க வீடியோக்களை படம்பிடித்துபிளாக்மெயில் செய்த நபர் பெங்களூருவில் கைதாகியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ். பொறியியல் பட்டதாரியான இவர் உணவு வியாபாரம் செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் மகேஷின் தோழியாவார். அந்த பெண் தோழி பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்னர் மகேஷ் பெங்களூரு வந்த நிலையில், அந்த பெண் தோழியின் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது தனது சார்ஜரில் ரகசிய கேமரா பொருத்தி அதை பெண் தங்கியிருந்த அறையில் வைத்துள்ளார். இந்த நிலையில் இரண்டு நாள்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், அந்த பெண் உடை மாற்றும் வீடியோக்களை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்துள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய நிலையில், போலி சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை அந்த பெண்ணுக்கு பகிர்ந்து, தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும் இல்லை என்றால் அபாச வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இவர் தனது அடையாளத்தை பெண்ணிடம் வெளிப்படுத்தவில்லை. இந்த வீடியோ எப்படி பதிவானது என அதிர்ச்சியடைந்த அந்த பெண் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஐபி அட்ரஸ் மூலம் இந்த பதிவுகளை அனுப்பிய நபர் யார் என காவல்துறை கண்டுபிடித்த நிலையில், இதற்கு பின்னணியில் பெண்ணின் நண்பர் மகேஷ் தான் இருந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இவர் ஆன்லைன் மூலம் இந்த ஸ்பை கேமராவை ரூ.1,500க்கு வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நபரின் வலையில் வேறு பெண்களும் சிக்கியுள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறை தற்போது விசாரித்து வருகிறது.மேலும் மகேஷிடம் இருந்து ஸ்பை கேமரா, இரண்டு மெமரி கார்டு, பென் டிரைவ், இரண்டு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.