புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ கல்வி முறையை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டம் (CBSC )அறிமுகப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்னர் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்தார். அப்போது பேசிய அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அதிக வகுப்புகளைக் கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது என்றார். எனவே, 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்தது.
தற்போது, அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து,புதுச்சேரி காவல்துறையில் 1,044 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சீருடைப்படி நிலுவைத் தொகையில் முதல் தவணையாக, இரண்டு வருடங்களுக்குரிய ரூ.5.5 கோடி வழங்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த சீருடை படியானது ஊர்காவல் படையினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்க ஆபரேஷன் விடியல் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில் பொதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி இதுவுரை 99 குற்ற வழக்குகள் பதியப்பட்டு 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 53.231 கிலோ கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ரவுடிகளை ஒடுக்க ஆபரேஷன் திரிசூல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 23 கொலை வழக்குகள், 16 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 1,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி புதுச்சேரியில் உள்ள 60 காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு மதிப்பீடு ஆராயப்பட்டு ரூ.3.74 கோடிக்கு புனேயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பணி ஆணை அளிக்கப்பட்டுள்ளது. கேமரா பொறுத்த ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 37 சிக்னல்களை சரி செய்ய ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்த அவர்,
மகாராஷ்டிரா மற்றும் டெல்லியைப் போலவே கடுமையான சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்றார்.மேலும் “மஹாராஷ்டிராவில் இதேபோன்ற சட்டத்தின் அடிப்படையில், புதுச்சேரியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் கட்டுப்பாட்டுச் சட்டத்தை (PCOCA) கொண்டு வருவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கூறினார்.