மாயமாகி சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி எழுதிய மேலும் ஒரு கடிதம் வெளியான நிலையில், தமிழக அரசின் காவல்துறை இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்னும் கேள்வி எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார்.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவரான இவர் கடந்த 2ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
இது தொடர்பாக அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் என்பவர் உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது தனது தந்தை, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதி வைத்திருந்ததாக 2 கடிதங்களையும் ஜெப்ரின் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து ஜெயக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 4ஆம் தேதி காலை ஜெயக்குமார், தனது வீட்டருகே உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதுகுறித்த தகவலில் உவரி போலீசார், ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், ஜெயக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் வெளியானது.
மரண வாக்குமூலம் என்னும் பொருளில் ஏப்ரல் 30ஆம் தேதியிட்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எனக்கு சமீபகாலமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது.
3 தடவை எனது வீட்டு வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் சந்தேகத்திற்கு இடமாக இருந்தது.
எனக்கு ஏதாவது நேர்ந்தால் அது கீழ்க்கண்டவர்களின் சதியாக இருக்கும் என சந்தேகப்படுபவர்களின் பெயர்களையும் அதற்குரிய காரணத்தையும் பட்டியல் இடுகிறேன் என்று கடிதத்தில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளிகுளம் முன்னாள் கோயில் தர்மகர்த்தா மற்றும் ஊராட்சிமன்ற தலைவர் ஆனந்தராஜா, நெடுஞ்சாலைத்துறை முன்னாள் அதிகாரி குத்தாலிங்கம், இடையன்குடி சிசிஎம் பள்ளி தாளாளர் ஜெய்கர்,
நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், மருகால் குறிச்சியை சேர்ந்த செல்லபாண்டி, முன்னாள் காங்கிரஸ் தலைவரான கே.பி.தங்கபாலு, கமலா,
புதியம்புத்தூர் இம்மானுவேல் கிரஷர் உரிமையாளர் ஜேசுராஜா ஆகியோரின் பெயர்களை கடிதத்தில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இவர்கள் தொழில் ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் லட்சக்கணக்கில் பணம் தரவேண்டி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், மேற்கண்ட நபர்கள் தன்னை வஞ்சித்து ஏமாற்றிக எடுத்துக் கொண்டதை தனது குடும்பத்தினருக்கு பெற்று தந்திட வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தக் கடிதம் வெளியானதைத் தொடர்ந்து, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் 30ஆம் தேதியே கடிதம் கொடுத்திருந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் மாயமாகி சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக
அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
அந்த நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும்,
அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுக்கும் காவல்துறைக்கும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதமும் வெளியாகியுள்ளது.
தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், தனக்கு யார் யார் எவ்வளவு பணம் தரவேண்டும்,
தான் எவ்வளவு பேருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்னும் 14 பேர் கொண்ட பட்டியலைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் 70 லட்சம் தரவேண்டும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு 11 லட்சம் தரவேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
தனது பிரச்சனைக்காக நீங்கள் அவர்களை பழிவாங்கக் கூடாது. சட்டம் தன் கடமையைச் செய்யும், என தன் குடும்பத்தினருக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதம் வெளியாகியதைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகியின் கடிதம் தொடர்பாக, கடிதத்தில் பெயர்கள் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
மே 3-ந்தேதி ஜெயக்குமாரின் மகன் புகார் தரும்போதுதான் எஸ்.பி. மற்றும் மருமகனுக்கு ஜெயக்குமார்எழுதிய 2 கடிதங்கள் தரப்பட்டன. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே நடந்தது கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்” என்று டி.ஐ.ஜி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.
விரைவில் ஜெயக்குமாரின் மரணத்தில் நீதி கிடைக்கவேண்டும்… குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.