சவுக்கு மீடியா மீதான அடுத்தடுத்த வழக்குப்பதிவுகள், கைது நடவடிக்கைகள் அதன் மீதான அரசின் அடக்குமுறையையே காட்டுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தவறுகளை சமரசம் இன்றி சுட்டிக் காட்டும் சவுக்கு மீடியா மற்றும் அதன் ஊழியர்கள், செய்தியாளர்கள் மீதான வழக்குகளும், தொடர்ச்சியான கைதுகளும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
இந்த போக்கு கண்டனத்திற்குரியது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இதையும் படிங்க: ”சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை..” சட்டென ரியாக்ட் செய்த ஜெயக்குமார்!
தங்களுக்கு எதிரான பத்திரிக்கைகளின் சுதந்திரத்தை அடக்குமுறை கொண்டு நசுக்கிவரும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை போன்று தமிழக அரசும் பத்திரிக்கை சுதந்திர அடக்குமுறையைப் பின்பற்றி வருவது கண்டனத்திற்குரியது.
சுதந்திரமான பேச்சுரிமையின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும், பத்திரிகையாளர்கள் அச்சமின்றி அல்லது அடக்குமுறை தணிக்கையின்றி பணியாற்றுவதை உறுதிசெய்வதற்கும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று தமிழக முதல்வர் பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டார்.
ஆனால், அதற்கு நேரெதிரான வகையிலேயே ஊடக சுதந்திரத்தை மிரட்டும் வகையில் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை காவல்துறை மூலம் ஏவப்பட்டு வருகின்றது.
சவுக்கு மீடியா மீதான தொடர்ச்சியான அடுத்தடுத்த வழக்குப் பதிவுகள், கைது நடவடிக்கைகள் ஆகியவை அதன் மீதான தமிழக அரசின் அடக்குமுறையையே காட்டுகின்றது.
ஆகவே, செய்தி ஊடகங்களின் மீதான ஆரோக்கியமற்ற அடக்குமுறைகளை கைவிட்டு, அவற்றின் சுதந்திரமான செயல்பாட்டை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு மீடியாவின் தலைமை ஆசிரியர் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.
ஊடக சுதந்திரத்தை மிரட்டும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் ரோஜாவிற்கு எதிராக சொந்தக் கட்சியினரே போர்க்கொடி!