ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் என்று தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றத்திலும் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் இன்னமும் ஆன்லைன் ரம்மிக்கு முற்றிலும் தடை விதிக்கப்படவில்லை.
இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
தற்போதும், மருத்துவக்கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது. சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது.
வடசென்னை கொருக்குப்பேட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் தனுஷ் (வயது 23). இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார்.
தனுஷுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் தீவிர ஆர்வம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்திருக்கிறார்.
இதையும் படிங்க: சமூகநீதிப் புயலால் மோடியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. – செல்வப்பெருந்தகை
ஆனாலும் விட்டதைப் பிடிக்கும் ஆர்வத்தில் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்தபோதும் அவர் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனுஷ் தனது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் பணம் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்து ரூ.4000 மட்டுமே கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், பணத்தை வாங்கிக் கொண்டு தனது அறைக்குள் சென்றவர் கதவைப் பூட்டிக் கொண்டிருக்கிறார். நீண்டநேரமாக கதவு திறக்கப்படாததால அவரது தங்கை கதவைத் தட்டியிருக்கிறார்.
ஆனாலும் கதவைத் திறக்காததால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், ஆர்.கே.நகர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனுஷ், மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து தற்கொலை செய்த தனுஷின் உடலைக் கைப்பற்றி போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனுஷின் செல்போனையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததே, தனுஷின் தற்கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மியால் மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உடனடியாக ஆன்லன் ரம்மி விளையாட்டை முற்றிலுமாக தடை செய்து உயிர்கள் பலியாவதை அரசு தடுக்க வேண்டும் என்று தனுஷின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.