ஓடும் ரயிலில் பயணியிடம் 20 சவரன் நகையை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரி வரை செல்லும் காச்சிகொடா ரயிலில் பயணம் செய்த பயணியின் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் மாயமாகி உள்ளது.
அரக்கோணம் ரயில்வே போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
இவருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த ப்ரீத்தி(26)க்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் ஹைதராபாத் சென்றுவிட்டு நேற்று திரும்பினர்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் காரில் திருவள்ளூர் சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு சென்று உடைமைகளை சரி பார்த்தபோது அவர்களது பேக்கிலிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் காணாமல் போனது தெரிய வந்தது.
இது தொடர்பாக, ப்ரீத்தி அரக்கோணம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
தனது குடும்பத்தினருடன் பயணம் செய்த போது தனது பையிலிருந்து 20 சவரன் தங்க நகைகள் ரொக்கம் ரூ.10 ஆயிரம் காணாமல் போனதாக புகாரில் கூறியிருந்தார்.
மேலும், ரயிலில் பயணம் செய்த 4 வடமாநில இளைஞர்கள் தங்களிடம் பேசி கவனத்தை திசை மாற்றி திருடி இருக்கலாம் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரினை பெற்ற அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.