ஆந்திராவில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆந்திராவில் வருகிற 13ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை காக்கிநாடா மாவட்ட பித்தாபுரத்தில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வாகனம் ஒன்றை சோதனையிட்டனர். அதில் இருந்த இரும்புப் பெட்டியில் தங்கக்கட்டிகள் வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.17கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட தங்கம் குறித்து விசாரித்ததில் ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளார். இதனால் தங்கத்துடன் வாகனத்தை பித்தாபுரம் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கக்கட்டிகள் எங்கிருந்து வருகிறது? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.