நெல்லையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனு அளித்த காங்கிரஸ் நிர்வாகி மாயமான நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் கருத்தையா ஜெப்ரின்.
கடந்த 2ம் தேதி இரவு வெளியில் சென்று வருவதாகக் கூறிச் சென்ற ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை. அவரது மகன் ஜெப்ரின் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தையை கண்டுபிடித்து தருமாறு உவரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஜெயக்குமார் தன்சிங் உடல், தீயில் எரிந்த நிலையில் அவரது வீட்டருகே உள்ள தோட்டம் ஒன்றில் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சடலத்தைக் கைப்பற்றிய உவரி போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பிவிட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஜெயக்குமாரின் வீட்டில் சென்று அவரது அறையை சோதனையிட்டபோது, ஜெயக்குமார் தன்சிங் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் லெட்டர்பேடில் எழுதியிருந்த அந்தக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனக்கு சமீப காலமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது. நான் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கண்டு கொள்வதில்லை. 3 தடவை எனது வீட்டு வளாகத்தில் இரவு நேரங்களில் ஆள்நடமாடுவதாக சந்தேகத்திற்கு இடமாக இருந்தது. நான் இரவு நேரில் சென்று சத்தமிடவும் ஓடிச் சென்றது நடந்துள்ளது. திருடுவதற்கு வந்த நபர்களாக இருக்கும் என்று பெரிதுபடுத்தவில்லை.
ஆனால் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அது கீழ்க்கண்டவர்களின் சதியாக இருக்கும் என சந்தேகப்படுகிறவர்களின் பெயர்கள் மற்றும் காரணங்களை கீழ்க்கண்டவறு பட்டியல் இடுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: ஆந்திராவில் சிக்கிய ரூ.17கோடி தங்கக் கட்டி; கடத்தியது ஏன்?

ஜெயக்குமார் கடிதத்தில் பட்டியல் இட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் அந்த பட்டியலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் பெயரும் இருப்பதாக தற்போது பரபரப்பு எழுந்துள்ளது.
அதே போல் தொழில் ரீதியாக தனக்கு கடன் தரவேண்டியவர்கள், தான் பணம் கொடுக்க வேண்டியவர்களின் விவரத்தையும் கடிதத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்புக்கு காரணம் கடன் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் தகராறா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து… – அரசுக்கு சீமான் கண்டனம்!