5வது கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இதுவரை ரூ.8889 கோடி மதிப்பில் பொருட்களும், ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது தொடங்கி கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தன.
இதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்கள், ரொக்கப்பணம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கையிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இன்று 5வது கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் இதுவரை ரூ.8889 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், இதுவரையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3,958.85 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போலகுஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல்படை ஆகியவை ரூ.892 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக தருவதாக கொண்டு செல்லப்பட்ட, ரூ.2,006 கோடி மதிப்பிலான பொருட்கள்,
தங்கம், வெள்ளி போன்றவை ரூ.1,260 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டன.
ரொக்கமாக மட்டும் ரூ.849.15 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
அதே போல 815 கோடி ரூபாய் மதிப்பில் 53.97 மில்லியன் லிட்டர் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக குஜராத்தில் ரூ.1,462 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டன.
இதில் போதைப்பொருட்கள் மட்டும் ரூ.1,188 கோடிஆகும்.
ராஜஸ்தானில் ரூ.1,134 கோடி அளவுக்கு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகாவில் ரூ.175 கோடி மதிப்பிலான மது பானங்களும், தெலங்கானாவில் ரூ.114 கோடிக்கு ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் ரூ.195 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜஸ்தானில் இலவச பொருட்கள் ரூ.757 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் ரூ.8,889 கோடி அளவுக்கு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.