தமிழக காங்கிரஸில் மாவட்ட தலைவர்களை மாற்ற செல்வப்பெருந்தை அதிரடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அழகிரியை அப்போது மாற்றுவார்கள் இப்போது மாற்றுவார்கள் என்று ஆருடங்கள் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் ஒருவழியாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவராக்கப்பட்டார். இதன் பின்னணியில் திமுக தலைமையின் ஆதரவும் இருந்ததாக அப்போது பரபரப்பு கிளம்பியது.

வழக்கமாக காங்கிரஸில் மாநிலத் தலைமை மாற்றப்பட்டதும், அதற்கேற்ப மாவட்ட அளவிலும் நிர்வாகிகள் பலர் மாற்றப்படுவார்கள். மாநிலத் தலைமைக்கு வேண்டியவர்களை புதிய நிர்வாகிகளாக நியமிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் செல்வப்பெருந்தகை நியமிக்கப்படும்போது தேர்தல் நேரம் என்பதால் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது, தேர்தல் நடந்து முடிந்து முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அராஜகமான, அநியாயமான பத்திரப் பதிவு கட்டண உயர்வு.. அண்ணாமலை கண்டனம்!
இந்த நிலையில் காங்கிரஸில் மாவட்ட தலைவர் முதல் நிர்வாகிகளை மாற்றும் வேலையில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்டமாக, காங்கிரஸில் உள்ள 78 மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். மே 13ஆம் தேதி திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டவர், இன்று (மே 14) திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.

இந்த கூட்டங்களில் மாவட்ட தலைவர்களின் செயல்பாடு பற்றியும், அவர்களை பதவியில் தொடர வைப்பது குறித்தும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸில் ஏற்கனவே மாநிலத் தலைவர்களாக இருந்தவர்களின் சிபாரிசின் பேரில் மாவட்ட தலைவர்களை நியமித்துள்ளனர். அந்த நிலை இப்போதும் தொடருமா? அல்லது செல்வப் பெருந்தகை தனது ஆதரவாளர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பாரா என்பதெல்லாம் தேர்தல் முடிவு வெளியானதும் நிகழும் மாற்றத்தில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.