கடலூரில் தேர்தல் அன்று பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பியதாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற அன்று கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: ”திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்து..” – அண்ணாமலை!
தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.
அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.
இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், “கடந்த ஏப்ரல் 19 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமாணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி தலையிட்டு, பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறானது என கடலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், இந்த கொலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவினரை தொடர்புப்படுத்திப் பேசி இருந்ததால், திமுக இளைஞரணிச் செயலாளர் சுவாமிநாதன் என்பவர் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.