ஒற்றைத் தலைமை விவகாரம் பூதகரமான நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்ட நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இதனை அடுத்து இந்த மனுக்கள் பலமுறை விசாரிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த ‘சீல்’ அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.