அ.தி.மு.க. அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செல்வதை டி.ஜி.பி. அனுமதிக்க கூடாது ஓசூரில் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.
பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.
இது குறித்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான புகழேந்தி ஓசூரில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்வதை டி.ஜி.பி. அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் மீண்டும் பெரிய பிரச்சினை உருவாகும் என தெரிவித்த அவர், சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முதல்-அமைச்சர் அனுமதிக்க மாட்டார் என்று நம்புகிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சி அலுவலகத்திற்கு செல்வது சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிரான செயலாகும் சுப்ரீம் கோர்ட்டில் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா கட்டிகாத்த அ.தி.மு.க என்ற இயக்கம் யாருடைய சொத்தும் அல்ல என்றும் டி.ஜி.பி. மற்றும் போலீசாரை கேவலமாக விமர்சிக்கும் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.