நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணைக் குழாய் மே 31,ம் தேதிக்குள் முழுமையாக அகற்றப்படும் என நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற வட்டம் மீனவர்கள், சிபிசிஎல் ஆலை நிர்வாகிகள், வருவாய்த்துறை இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முடிவு செய்யபட்டுள்ளது
நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
மேலும் குழாய் உடைப்பு காரணமாகக் கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் கடலில் மாசு ஏற்பட்டதுடன் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயை நிரந்தரமாக அகற்ற வேண்டுமென நாகை வட்டம் மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இது குறித்தான சுமுக பேச்சுவார்த்தைக்கான கூட்டம் இன்று நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,நாகை வட்டத்தைச் சேர்ந்த அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பட்டினச்சேரி உள்ளிட்ட 7 கிராம மீனவர்கள், சிபிசிஎல் ஆலை நிர்வாகிகள் மற்றும் வருவாய்த்துறை, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகின்ற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் குழாயை நிரந்தரமாக அகற்றுவது என முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது.
பின்னர் அரசு அதிகாரிகள் முன்னிலையில் சிபிசிஎல் ஆலை நிர்வாகம் மற்றும் வட்டம் மீனவர்கள் கையெழுத்திட்டனர்.
கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே பொதுமக்கள் அச்சமில்லாமல் மீன்களை வாங்கி உண்ணலாம் என நாகை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்