கொடைக்கானல் அருகே பள்ளத்தில் கவிழ்த்த பேருந்தில் சிக்கியவர்களைப் ”மைனா” திரைப்பட பாணியில் பொதுமக்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து மீட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலத்திலிருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கர்நாடகா வழியாகச் சுற்றுலா பேருந்து மூலம் கொடைக்கானல் வந்துள்ளனர். அங்கு பல்வேறு சுற்றுலா தளங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு இன்று காலை சுற்றுலா பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் டம்டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அந்த பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுவதால், பேருந்து பள்ளத்தில் கீழே செல்லாமல் மரங்களுக்கு இடையில் சிக்கியது.
இதையடுத்து அந்த பகுதியிலிருந்த பொதுமக்கள், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களைக் கவனமாக மீட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனைத் தடுக்க இந்த பகுதியில் வேக தடை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.