கன்னியாகுமரியில் சுற்றுலா வந்து கடலில் மூழ்கி பலியான 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி அருகே, கடலில் குளித்த மருத்துவக் கல்வி கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கடலில் மூழ்கி பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமுமளிக்கிறது. அவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
பொதுமக்கள் அனைவருமே, நீர்நிலைகளில் மிகக் கவனமாக இருக்கவும், தகுந்த பாதுகாப்பின்றி, நீர்நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 12 மாணவர்கள், நாகர்கோவிலில் திருமணம் ஒன்றில் பங்கேற்க வந்திருந்தனர். முன்னதாக கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு, ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரையில் கால்நனைத்து விளையாடினர். அப்போது எதிர்பாராமல் எழுந்த ராட்சத அலையில் சிக்கிய 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
காற்றின் போக்கு காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட கடல் பகுதிகளில் அலைகள் அதிக உயரத்துக்கு எழும். கடல் கொந்தளிப்புடன் காட்சி அளிக்கும். இதனால் யாரும் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கடல்சார் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை அலட்சியம் செய்துவிட்டு சென்றவர்கள் கடல் அலையில் சிக்கியதாக கூறப்படுகிறது.