தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது, சென்னையில் இருந்து 620 கி.மீ. தொலைவில் ‘மாண்டஸ்’ புயல்’ மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை, கடலூர், எண்ணூர், காரைக்கால், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்? வானிலை மையம் அறிவிப்பு
இதனிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் , மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் அடங்கிய குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நிலையில் மழை புயல் காலத்தில் நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்து கொள்கிறோமோ அதே போல் நம்மை சுற்றியுள்ள மற்ற விலங்குகளையும் உயிரினங்களையும் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ அல்லது மறந்தோ சில நேரங்களில் நம் வீட்டு விலங்குகள் மற்றும் மற்ற விலங்குகளை அப்படியே விட்டு விட்டு செல்கிறோம்.
அப்படி ஆதரவிற்கோ அல்லது உதவிக்கோ யாரும் இல்லாமல் சில நேரங்களில் தனித்து விடப்பட்டு அவற்றின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது. இவற்றை பற்றிய விழிப்புணர்விற்காக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.