கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைதுசெய்துள்ளனர்.பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் கைதுக்கான காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த மாதம் 13-ம் தேதி பள்ளி விடுதியில் +2 மாணவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனிடையே, மாணவி மரண வழக்கில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஐவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இது குறித்து அப்போது ஆசிரியர்கள் தரப்பில், மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றே தெரியவில்லை எனவும் வாதாடப்பட்டது.
மாணவியின் பெற்றோர் தரப்பில், தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தனர் என கேள்வி எழுப்பினார்.
அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா போன்ற விவரங்களை விளக்கியிருக்க வேண்டும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞரை அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து மனுதாரர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இல்லையெனில் விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் .