கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 143 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் . 105 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சசிகலா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 40 நபர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
இதில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. இதுவரை 65க்கு மேற்பட்டவர்கள் உடல்நிலை மோசமாக பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரியவருகிறது.
சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
இதேபோன்று கடந்த ஆண்டு மே மாதம் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து இரண்டு நாட்களிலேயே 21 நபர்கள் பலியாகினர்.
திமுக தலைமையிலான அரசு இதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் இத்தகைய மரணங்கள் தொடர்ந்து ஏற்படுகிறது.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.
தடுத்து நிறுத்தவேண்டிய திமுக தலைமையிலான அரசோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
திமுகவினரின் அலட்சியப்போக்காலும், மக்களை பாதுகாக்கக்கூடிய எந்தவித நடவடிக்கைகளை எடுக்காததினாலும் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம் என்று வேதனையாக இருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தேவையான நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.