திமுகவுக்கு தோல்வி பயம் காரணமாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ளஓட்டு போட முயன்றதாக தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களவை தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் களம் இறங்கிய தமிழிசை சௌந்தர்ராஜன், இன்று (சனிக்கிழமை) தென்சென்னை தேர்தல் அதிகாரியை நேரில் சென்று மனு அளித்தார். தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 122 வட்டம், வாக்குச்சாவடி எண் :13 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் வாக்குச்சாவடி கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது:-
நேர்மையான முறையில் தேர்தல் நடந்து அதன் மூலம் வெற்றி பெறுவதுதான் ஜனநாயகத்தின் நடைமுறை… ஆனால் திமுக அரசுக்கு எப்போதெல்லாம் தோல்விபயம் வருகிறதோ, அப்போதெல்லாம் மாற்றுப்பாதயைக் கடைப்பிடிப்பது வழக்கம்.
அதே போல தென்சென்னை தொகுதி மயிலாப்பூரில் 122வட்டம், வாக்குச்சாவடி எண் 13ல், 50 பேர் உள்ளே புகுந்து ஏஜெண்டுகளை அடித்து துரத்தி கள்ளஓட்டு போட முயற்சி செய்தார்கள். இது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகளின் புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவினை நாங்கள் கேட்டிருக்கிறோம்.
சாலிகிராம், சோழிங்கநல்லூர் வாக்குச்சாவடிகளிலும் கள்ளஓட்டு முயற்சி நடந்துள்ளது. திமுக இதே போன்று அராஜகத்தில் ஈடுபடக்கூடாது என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.
இதையும் படிங்க: தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகள் -வீரமணி!
அதேபோன்று பல இடங்களிலும் வாக்காளர்களின் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தி.நகரில் உள்ள 4 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர் இருந்து பிள்ளைகள் பெயர் இல்லை, கணவனின் பெயர் இருந்து மனைவி பெயர் இல்லை… குடும்பத்தையே தேர்தல் ஆணையம் பிரித்து வைத்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இதே போல் வெள்ளிக்கிழமையும், திங்கட்கிழமையும் தேர்தல் வைப்பதால், அந்த இருநாட்களையும் விடுமுறையாக எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் இந்த நாட்களில் தேர்தல் வைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோடிக்கணக்கில் தேர்தல் ஆணையம் செலவு செய்தும் அதற்கு எந்த பலனும் இல்லை என்பதை சென்னையின் வாக்குப்பதிவு நிலவரங்கள் எடுத்துக் காட்டுகிறது. வாக்குபதிவு விழிப்புணர்வுக்காக செலவழிப்பதைவிட, மக்களுக்கான வாக்குகள் இருக்கிறதா என்பதை மறுபடியும் மறுபடியும் சென்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: தேர்தல் விடுமுறையை கொண்டாடும் மக்கள் – வருத்தம் தெரிவித்த தமிழிசை
வாக்குப் பதிவு என்பது வலிமையானது; ஆனால் என்னிடம் அடையாள அட்டை உள்ளது. வாக்குச்சாவடிக்கு சென்றும் வாக்களிக்க பெயர் இல்லாதது வலியான விஷயம்.
ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது என்பது வருத்த அளிக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் நான் வெற்றி பெறுவேன் என்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று கோரிக்கை மனு