கோத்தகிரி அருகே வட்டப்பாறை கிராமத்தில் சாலை வசதி இல்லை தொட்டில் கட்டி நோயாளிகளை தூக்கிச்செல்லும் அவலம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் வட்டப்பாறை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு இன்று வரை சாலை வசதி இல்லாமல் உள்ளது.
காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக உள்ள இந்த கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லை. பிரதான சாலையில் வட்டப்பாறை முடக்கில் இருந்து தனியார் தேயிலைத் தோட்டம் வழியாகத்தான் இந்த கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.
கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் முதியவர்கள் மற்றும் கர்பிணிகளை தொட்டில் கட்டி தொட்டில் கட்டி நோயாளிகளை தூக்கிச்செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஊராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் விஜயா என்பவருக்கு (வயது 55) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் கூட வர முடியாது. இதனால் இளைஞர்கள் உட்பட அப்பகுதி மக்கள் இணைந்து தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனர்.