admk protest- கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாகவும், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேச அனுமதிக்காததை கண்டித்தும், நடப்பு கூட்டத்தொடர் முழுமைக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளதை கண்டித்தும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறி கருணாபுரத்தில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவை 21 ஆம் தேதி முதல் . 29 தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாட்களாக அதிமுக கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் இதற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டு , நடப்புக் கூட்டத் தொடர் முழுவதுமே அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர்.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.