சொத்துபிரச்சனையில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சொத்து பிரச்னை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த மே 13ஆம் தேதி தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே.16) உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருத குளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர சுப்பு (32). கூலித் தொழிலாளியான சங்கரசுப்பு, பூர்வீக சொத்தில் இருந்து தனது பங்கை பிரித்து தரவில்லை எனக்கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அங்கு நடவடிக்கை எதுவும் எடுக்காததால், மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து சென்றுள்ளார்.
ஆட்சியரகத்திலும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மனம் உடைந்த சங்கரசுப்பு, கடந்த 13ஆம் தேதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் அப்துல்ஹமீது மற்றும் காவலர்கள், சங்கரசுப்பு மீது தண்ணீரை ஊற்றிமீட்டனர். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தீக்காயப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சங்கரசுப்பு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சங்கரசுப்பு உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது ஊரான மருதகுளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து அவரது, மனைவி குழந்தைகள் என 4பேர் தீக்குளித்து மாண்டு போயினர். அதன்பிறகு ஆட்சியரகத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் தற்கொலை முயற்சிகள் தொடர்கதையாகி வந்த நிலையில், தற்போது தீக்குளித்த சங்கரசுப்பு உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.