கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் இலவச மருத்துவ சிகிச்சை இல்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டாலும், சிலர் தடுப்பூசி செலுத்த மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் இலவச மருத்துவ சிகிச்சை இல்லை என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பணியாளர்கள் ,பொதுமக்களை நேரில் சந்திக்கும் பணியில் இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் மருத்துவ காரணங்களால் தடுப்பூசி போட இயலாது என்று கூறுபவர்கள் மற்றும் ஒவ்வாமை உடல்நலக் குறைபாடு காரணமாக தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்கள் அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள அரசு கூறியுள்ளது.
மேலும் பள்ளி ஊழியர்கள் ஏழு நாட்களுக்கு ஒருமுறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கொரோனா இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட மறுப்பவர்கள் தங்கள் ஆர்டிபிசிஆர் சோதனைகளுக்கான பணத்தை தாங்களே செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கேரள அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.