சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
“அதிமுக செயற்குழுவில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை மாற்றி, இனி அவர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அடிப்படை சட்ட விதிகளை தளர்த்தவும் விலக்கு அளிக்கவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் 5 ஆண்டுகள் உறுப்பினர்களை உள்ளவர்களே அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியை பெறுவார்கள்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்துக்கு எதிராக முறைகேடுகளை அரங்கேற்றி திமுக வெற்றி பெற்றதற்கு கண்டித்து கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்ட – ஒழுங்கை நிலைநாட்ட தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்” என்று அந்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.