தமிழகத்தை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை என்றும்
நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு சிறப்பாக ஈடுபட்டு வருவதால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக வார் மெமோரியல் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது :
“மழைக்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மாநகராட்சியில் 9969 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 5,00,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை . நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு சிறப்பாக ஈடுபட்டு வருவதால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் .காய்ச்சிய குடிநீர் மற்றும் சுத்தமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும்;
மழைநீர் வடிந்த இடங்களில், ஏழை எளிய மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாம்களில் பயன் அடைந்து உள்ளனர். நற்செய்தி என்னவென்றால் மழைக்குப் பிறகு எந்த தொற்றுநோயும் ஏற்படவில்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.