பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலின் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியை ஒட்டி பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் விழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. 21ஆம் தேதி இரவு தீக்குண்டம் வார்ப்பு விழாவும், 22ஆம்தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இதனை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்துக்கு 22 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
கல்லுாரி மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும் தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 26 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் தெரிவத்தார்.
வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்பதால் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் உள்ளூர் விடுமுறை நாளான மார்ச் 22 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.