ஒடிஷாவில், ஏற்பட்ட உலகையே உலுக்கிய ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை (investigation) தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணியளவில் ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே கொல்கத்தாவின் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்,
பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மற்றும் சரக்கு ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 278 பேர் பலியானதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், சிக்னல் தொடர்பான மின்னணு இண்டர்லாக்கிங்கில் வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த ரெயில் விபத்து வழக்கு தொடர்பாக எஃப்.ஐ.ஆரை மீண்டும் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., இதுகுறித்து விசாரணை (investigation) நடத்த 10 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்து உள்ளது.
இந்நிலையில், உடனடியாக விசாரணையை துவங்கிய சி.பி.ஐ, ஒடிஷாவின் பஹானகாவில் விபத்து நடந்த தண்டவாளங்கள், சிக்னல் அறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று விபத்து ஏற்பட்டதற்குக் காரணம் மனிதத் தவறா அல்லது சதிகாரர்களின் நாசவேலையா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர, இந்த விபத்து குறித்து ரயில்வேயும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.