பிரபல ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலா (ola) நிறுவனம், “பிரைம் பிளஸ்” என்ற புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பிரைம் பிளஸ் சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் பயணிக்க சிறந்த கார்கள் வழங்குவதுடன், பயனர்கள் இலவசமாக கேன்சல் செய்யும் வசதியும் அளிக்கப்படும்.
இந்த புதிய பிரீமியம் சேவை முதற்கட்டமாக பெங்களூரில் மட்டும் செயல்படும் என்று ஓலா (ola) நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்த பிரீமியம் சேவை முதலில் பெங்களூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்றும் அடுத்த சில வாரத்தில் பெங்களூரின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், அடுத்த சில மாதத்தில் இந்தியாவின் பிற நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சேவையின் விலை குறித்த விவரங்கள் ஏதும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. பயண தூரத்திற்கான விலை குறைவாக இருந்தாலும் பிரைம் பிளஸ் கட்டணம் கட்டாயம் அதிகமாக தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.