கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் ஓலா, ஊபர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோர் கால் டாக்சிகளை இயக்கி வருகின்றனர். இந்த ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் ஓலா, ஊபர் ஓட்டுநர்களும் கார் உரிமையாளர்களும் புகார்களை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும், பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் இன்று சிரமம் அடைந்துள்ளனர்.