ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஓணம் பண்டிகையானது பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர் கேரள மக்கள்.
அப்படி தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக தான் வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு அலங்கரித்து விளக்கு ஏற்றி அவரை வரவேற்கின்றனர்.
அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் சென்ன , கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் பகிர்ந்துள்ள ஓணம் வாழ்த்து பதிவில்..
“பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் நாம் சமமாகப் பார்ப்போம். மகிழ்ச்சி நிறைந்த ஓணம் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.