தெலுங்கானா மாநிலத்தின் பழைய நகரமான சங்காரெடியில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி, 2020 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில பிஜேபி தலைவர் பண்டி சஞ்சய் பேசியதை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.
ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலில் ரோஹிங்கியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் வாக்காளர்கள் உதவியுடன் பாரத் ராஷ்ட்ரிய சமிதி மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி ஆகியோர் வெற்றி பெற முயற்சிப்பதாக சஞ்சய் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். தேர்தல் முடிந்ததும் சங்காரெட்டி மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என்று பண்டி சஞ்சய் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் அளித்த ஓவைசி, தெலுங்கானாவின் பழைய நகரம் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக கூறும் பிஜேபி, தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தட்டும் என்று சாடினார்.
தமக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே சமரச திட்டங்கள் இருப்பதாக ஏப்ரல் 23 அன்று கர்நாடகாவில் சங்கல்ப் சபாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டதாக கூறிய ஓவைசி, தெலுங்கானா அரசை இயக்கும் ஸ்டீயரிங் தம்மிடம் இருப்பதால் அமித் ஷாவுக்கு என்ன கவலை ..? என்று கேள்வி எழுப்பினர்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சங்கல்ப் சபாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும், ஓவைசிக்கும் இடையே ரகசிய சமரச திட்டம் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மஜ்லிஸின் (ஓவைசி) கையில் இருக்கும் ஸ்டீயரிங்கால் தெலுங்கானாவை ஓட்ட முடியாது என்றும் தாங்கள் ஓவைசியை பார்த்து பயப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். பாரத் ராஷ்ட்ரிய சமிதிக்கு தான் ஓவைசி தேவை என்றும் பிஜேபிக்கு அல்ல என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். தெலுங்கானா அரசு மக்களுக்கு தான் பணியாற்ற வேண்டுமே தவிர ஓவைசிக்காக அல்ல என்றும் அமைச்சர் அமித்ஷா அந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.