துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70), இரண்டு மணி நேரம் காலில் அறுவை சிகிச்சை செய்து நலமுடன் இருப்பதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் பி.டி.ஐ மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி நீண்ட பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக குஜ்ரன்வாலா பகுதிக்கு சென்ற இம்ரான் கான் தொண்டர்களிடம் உரையாற்றுவதற்காக லாரியில் ஏறினார்.
அப்போது கூட்டத்தில் மறைந்திருந்த ஒருவர் இம்ரான் கான் மீது துப்பாக்கியால் சுட்டார். இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு தன்னார்வலர் கொல்லப்பட்டார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
மேலும் இம்ரான் கானுக்கு உடனடியாக கட்டு போடப்பட்டது, அங்கு தோட்டா அவரது காலில் பாய்ந்தது, அவர் லாகூரில் உள்ள சவுகத் கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இம்ரான் சுகமான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் பைசல் சுல்தான் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிடிஐ மூத்த தலைவர் ஃபவாத் சவுத்ரி கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு இம்ரான் கான் நன்றாக இருக்கிறார். இந்த சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சி. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பேரணியை வஜிராபாத்தில் இருந்து மீண்டும் தொடங்குவது குறித்து அறிவிப்போம்,” என்றார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் தொண்டர்கள் பேரணி நடத்த வேண்டும் என பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உயர்மட்ட குழு விசாரணை:
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் பொறுப்பு என்று பிடிஐ மூத்த தலைவர் ஆசாத் உமர் கூறினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை விசாரிக்க உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.