தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆலயத்தில் தினசரியும் முருகனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் நாட்களில் தேரோட்டம் நடைபெறும். இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2018ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவேண்டிய நிலையில் நடைபெறவில்லை. அதன்பின் கும்பாபிஷேகம் நடத்த வேண்டி பல்வேறு கோரிக்கைகள் எழுந்ததை தொடர்ந்து கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து, ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.
23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றதை தொடர்ந்து நேற்றைய தினம் மலைக்கோவில் மூலவர், ராஜகோபுரம், தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 8ஆம் கால யாக பூஜைகள் தொடங்கின.
இந்த பூஜைகள் நிறைவடைந்து, கோபுர கலசங்கள் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 9 மணிக்கு தமிழ் மந்திரங்கள் ஒலிக்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மலைக்கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2000 பக்தர்கள் மட்டுமே குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் குவிந்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரத்தில் 3 இடங்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரத்தில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.