பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில்,
“நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தான் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்” எனப் பேசி இருந்தார்.
இது தொடர்பாக பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி எஸ்.பி. வருண் குமார் உத்தரவின் பேரில் சென்னை ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து மோகன் ஜி கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து திருச்சிக்கு மோகன் ஜியை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : September 24 Gold Rate : தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?
இது தொடர்பாகத் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்,
“சினிமா இயக்குநர் மோகன் ஜி சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்குக் கூறப்படவில்லை.
இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்க்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
கஞ்சா கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாகச் செய்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.