புதுச்சேரியில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் சிக்கிய அரிய வகை மீனானது 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள ஏனாம் பிராந்தியத்தில் கடலும், ஆறும் கலக்கும் கழிமுக பகுதி உள்ளது. இங்கு அப்பகுதி மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
மேலும், இந்த பகுதியில் மீனவர்களின் வலையில் பாண்டுகப்பா என்ற அரிய வகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும். அப்படி வலையில் அரிதாக சிக்கும் இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், அங்கு மீன் பிடித்து வரும் பொன்னாட வரதம் என்ற மீனவர் ஒருவரின் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியுள்ளது.
அதையடுத்து, இந்த மீன் துறைமுக பகுதியில் ஏலம் விடப்பட்ட போது, இதனை ரத்தினம் என்பவர் 12 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி சென்றார். அந்த மீனின் வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.