சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் 3 வகையான ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கமும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்களும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் என 3 வகையான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆசிரியர்கள் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும், ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வருடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது..
“இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பகுதி நேர ஆசிரியர்களை பொறுத்தவரை ரூ.10 லட்சம் காப்பீடு, தொகுப்பூதியத்தில் ரூ.2500 உயர்த்தப்பட்டு ரூ.12,500ஆக வழங்கப்படும்” எனவும் அறிவித்தார்.
ஆனால், அவர் அறிவித்ததை ஏற்க மறுத்த இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் தொடரும் என அறிவித்தனர். மேலும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
தொடர் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டு சமுதாய நலக்கூடங்களில் வைக்கப்பட்ட நிலையில், 3 ஆசியர் சங்கங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் மட்டும் தங்களது போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் டெட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால், அவர்களது போராட்டம் தொடர்கிறது.