உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. ஏறத்தாழ 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. சரி நீரிழிவு குறித்து சற்று தெரிந்து கொள்வோம்.
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது.
உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல்,தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, எப்போதும் பசித்தல், உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல், காரணமில்லாமல் எடை குறைதல்,மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல்,மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
நீரிழிவை தொடக்கத்திலேயே கவனிக்காமல் விட்டால் பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். இதனால் பார்வையை இழக்க நேரிடலாம், சிறுநீரகங்கள் சேதமடையலாம். மூளைச்சேதமும், மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோயை கணப்படுத்த முடியாது என்றாலும், தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகளின் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களும், உடற்பயிற்சி மேற் கொள்வதும் நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது. சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ-ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றை உட்கொள்வது சிறந்தது.
கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
அதே போல் சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவர்களில் ஆலோசனைகளின் படி ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நீரிழிவில் இருந்து பாதுகாப்புடன் இருங்கள்.