ஜார்க்கண்டில் ஜன. 26 முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது பொது மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினை என்பதால் இது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான விமர்சனங்களும் அதிகமாக முன்வைக்கப்பட்டன.
மேலும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து உத்தரவிட்டன.
இதனால், அந்தந்த மாநிலங்களில் கணிசமான அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘ஜார்க்கண்டில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும். இந்த விலை குறைப்பு சலுகை குடியரசு தினமான ஜன. 26ம் தேதி முதல் அமலாகும் என தெரிவித்துள்ளார்.