காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் மோடி(PM Modi )தெரிவித்துள்ளார்.
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்:
இஸ்ரேல் ராணுவம் -ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 12வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம்,தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
இதனிடையே மருத்துவமனை மீது தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மறுப்பு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவிய ராக்கெட் தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்ததை தங்கள் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிர் இழந்தது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
மேலும் நடந்து கொண்டிருக்கும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயமாகும். சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.