ஆப்ரிக்க நாடுகளில் வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து அதனை கட்டுபடுத்தும் வகையில் ஊரடங்கு போடப்பட்டது. அதன் படி இந்தியாவிலும் ஊரடங்கு போடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் படிப்படியாக குறைவடைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் தற்போது ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் வீரியமிக்க கொரோனா குறித்தும் அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார்.
புதிய கொரோனாவான ‘ஒமிக்ரான்’ பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மற்றும் இந்த நாடுகளின் வழியாக வருபவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு நேற்று தகவல் தெரிவித்திந்தது குறிப்பிடத்தக்கது.