தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்தவும், கூடுதலான மருத்துவ மாணவர்களை சேர்க்கவும் வசதியாக புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியதோடு அனைத்து கல்லூரிகளையும் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கல்லூரிகளை தொடங்க மருத்துவ கவுன்சில் அனுமதியளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி விருதுநகர் மாவட்டத்திற்கு நேரடியாக வந்து 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேரில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
அதன்படி இன்று மாலை 4 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளன