ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார்.
சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த ராமானுஜரின் 216 அடி உயர பஞ்சலோக சிலையை இன்று ஹைதராபாத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் ராமானுஜரின் 216 அடி உயர பஞ்சலோக சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் ராமானுஜரின் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுடமையாக்க உள்ளார். இதற்காக அவர் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர், மாலை 5 மணிக்கு ராமானுஜரின் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். இதையொட்டி விழா நடைபெறும் ஆசிரமம் மற்றும் விமான நிலையம், ஆசிரமத்திற்கான வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.