தலைநகர் டெல்லியில் ரூ.1,250 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இன்று காலை 7.30 மணி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பூஜைகள் முடிந்த பின்னர், தமிழக மறைகள் முழங்க பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
அதையடுத்து, பிரதமர் மோடி செங்கோல் முன் தரையில் விழுந்து வணங்கினார். பின்னர், செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன் நாராயண்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர், நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் இருந்த கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை நிறுவினார்.
செங்கோலை வைத்த பின்னர், தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் பங்கேற்ற 20 ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
செங்கோலை நிறுவிய பிறகு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.
பின்னர், இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனைகளும் நடைபெற்றது. அதில், சங்கராச்சாயார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சரியாக 8.15க்கு புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.
பின்னர், பிரதமர் மோடி வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு வாழ்த்து கூறினார்.