ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருவ பொம்மை எரிப்பு (burning statue) சம்பவத்தில் தமிழ் புலி கட்சியை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்டியலினத்தவர் மக்களை குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
சீமானுக்கு பட்டியலினத்த சமூக அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில், சீமானை கண்டித்து தமிழ் புலி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ராசிபுரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் புலி கட்சியினர் திடீரென்று சாலையில் மறியலில் ஈடுபட்டு சீமான் உருவ பொம்மையை எரிக்க (burning statue) முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சிலர் சீமான் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கமிட்டனர். உருவ பொம்மையை எரித்த தமிழ் புலி கட்சியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.