புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு நடுவே பலூன் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று ஒருநாள் பயணமாக அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தந்தார். நேற்று சென்னைக்கு விமானம் மூலம் அமித்ஷா வருகை தந்தார்.
சென்னையில் அமித் ஷாவிற்கு பாஜகவினர் மூலம் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இன்னொருபுறம் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் அமித்ஷா என்ற ஹேஷ்டாக்கை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு அமித்ஷா இன்று புதுச்சேரி சென்றார். அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சாரம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன.
அப்போது அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாத அமித்ஷா திரும்ப போ என்றும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. கருப்பு பலூன்கள் பல இடங்களில் பறக்க விடப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது. அங்கு பாஜக – என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதால் போலீசார் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் சாரம் பகுதியில் கேஸ் பலூன் விற்க இருசக்கர வாகனத்தில் வந்த பலூன் வியாபாரி ஜெய்சங்கரை போலீசார் கைது செய்தனர். கோரிமேடு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்சங்கர் கருப்பு பலூன் விற்க வந்ததாக குற்றஞ்சாட்டி அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களின் கருப்பு கொடிகளை பறிக்க முயன்றபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே போல் கருப்பு சட்டை அணிந்து வந்தவரையும் சட்டை போலீசார் கழற்றியதால் தள்ளுமள்ளு தீவிரமடைந்தது. தற்போது போராட்டங்களை தடுக்கும் வகையில் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.