கைது செய்யப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் காவல் நிலையத்தில் தரையில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நெல்லை மாவட்ட பாஜக பிரமுகர் பாஸ்கரை, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஹோட்டலில் வைத்து தாக்கியதாகவும், தாக்குதல் நடைபெற்ற ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துச் சென்றதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
தாக்கியதாக கூறப்படும் பாஜக பிரமுகர் பாஸ்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்த்து திமுக எம்பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி பொன். ராதாகிருஷ்ணன் நேற்றிரவு நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு சாலையில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாததால் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினர் 5 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் தரையில் படுத்து உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜகவில் தலைவனும், தொண்டனும் வித்தியாசமின்றி எளிமையானவர்கள் எனக்கூறி பாஜகவினர் அந்த புகைப்படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.